காம பசியும் குப்பை தொட்டியும்

பெயர் : ஜெயந்தி. G.D.
தலைப்பு : காம பசியும் குப்பை தொட்டியும்

முதலிடம்

மன்மதன் அம்பு அது உனையும் துளைக்க…
இயக்குநீரும் அது சீறிப்பாய…
விரகதாபம் அது கனலாய் எரிய…
மோக வெள்ளம் அது பிரவாகமென பொங்க…
வஞ்சகன் விரித்த வலையில் விரும்பித்தான் விழுந்தாயோ?
கயவன் கணவனாய் காப்பானென்று கற்பை களவளித்தாயோ?
வயிற்றை நிரப்பியவன் கழுத்தை நிரப்ப மறந்தானோ?
விதையொன்று நனைந்து வேர்விட்ட பின் தான் தெளிந்ததோ நீயுற்ற காம பசி?

பழி செய்தது நீ பாவம் இன்று உன் சிசு!
முறைதவறியது நீ முறையற்ற வாரிசு இன்று உன் சிசு!
கர்ப்பம் தரித்தது நீ கரும்புள்ளி இன்று உன் சிசு!
தன்னிலை மறந்தது நீ கேள்விக்குறி இன்று உன் சிசு!!
வலி பொறுத்து ஈன்றது நீ வாழ வழி தெரியாமல் இன்று உன் சிசு!!


அள்ளியெடுத்து அணைக்க அன்னையும் இல்லை!
ஆறத்தழுவி ஆளாக்க அத்தனும் இல்லை!
உயிர் கொடுத்தவர் உதறி எறிய
இரத்தமும் சதையுமாய் 
உயிருள்ள பிண்டமாய்!!
கதறி அழுது காய்ந்தது மிடறு
தாய்ப்பால் தேடி வறண்டது நாவு
உதறி அழுது நொந்தது கைகால்
மறுகி கிடந்து உருகுது உயிரும்!!
எச்சிலை தொட்டி தூளி அருகே
எலியும் நாயும் பசித்திருக்க
காகமும் பருந்தும் வட்டமிட
எறும்பும் சிலந்தியும் படையெடுக்க
காலனும் வந்து காத்து நிற்க
கோமேதகம் ஒன்று குப்பைத்தொட்டியில்!!

இச்சையில் பிறந்த எச்சம்தான் எனினும்
துச்சமில்லை நான் இச்சகத்துள்ளே!
கோடி அணுக்களைத் தோற்கடித்து வென்று வளர்ந்தேன் நான் சூலகத்துள்ளே!
ஈன்ற பொழுதினும் பெரிதுவப்பாள் என் தாய் 
கர்ணன் பெற்ற குந்தியவள்  போலே!
குப்பைத்தொட்டியுள் என் சூளுரை இஃதே!!
@⁨Sowbarnika Pratibha⁩ @⁨Arun⁩

0 Comments