தெய்வ திருமகள்(ன்)

பெயர் : ஜெயந்தி.G.D
தலைப்பு : அழகிய தவறு!

அழகிய தவறு நீ!
க்ரோமோசோம்களின் திரிபு நீ!
ஹார்மோன்களின் சூழ்ச்சி நீ!
பிழையால் விளைந்த கவிதை நீ!
எச்சமாகிய இலக்கணம் நீ!
அவரோகணமாகிய ஆரோகணம் நீ!
மேல்கீழாய் கீழ்மேலாய் நிற்கும் விந்தை நீ!
ஒரு பிறப்பில் இரு பிறவி கண்ட நீ!
நங்கையாகிய நம்பியும் நீ!
தாயுமான தந்தை நீ!
உலுப்பி மைந்தன் துணைவி நீ!
அல்லவை அறியா அலியும் நீ!!

உன் கால் பதிய சுபிட்சம் பெறும் விழாக்கள்!
உன் கை ஏந்த தீர்க்காயுள் பெறும் மழலைகள்!
தீர்க்கதரிசி் நீ் மட்டும் தெருவில் நிற்கும் விலைமகளா!?

யானை முகன் வினாயகன்
சிங்க முகன் நரசிம்மன்
பாதம்தொழும் சமூகம்
அர்த்தநாரீ உன்னை
துதிக்க மறந்ததேனோ??

பாரதம் போற்றும் உன் பெருமை
பாரதி கண்ட உன் புதுமை
பாரத மக்கள் மனதில் மாய்ந்து 
அவர் மாக்கள் என ஆனதுவும்  ஏனோ??

கை தட்டி அழைப்பதை விடுத்து
கை தட்டவே நீ வைத்துவிடு!
யாசகம் வேண்டி அலையாதே
யாக வேள்வியெனவே நீ வாழ்ந்துவிடு!
அற்பமென உனை இகழ்பவரிடம்
சிற்பமென உனை நீ செதுக்கிவிடு!
சிதைக்க நினைக்கும் கயவர்களை
சிதையில் நீ எரித்து விடு!!
@⁨Barathi Pratibha⁩ @⁨Sowbarnika Pratibha⁩

0 Comments