பெயர் : ஜெயந்தி. G.D.
தலைப்பு : மௌன மொழிகள்
கருவறை முதல் கல்லறை வரை
சூலுற்ற அன்னை வயிற்றில்…
பெண் எனவே உருப்பெற்ற பின்…
பெருமிதமும் பேரானந்தமும் உற்று…
இப்பூவுலகை காணும் துடிப்புற்று…
கை கால்கள் அசைத்து, பசி உணர்த்தி…
அன்னையுடன் உறவாடிய பொழுதுகள் யாவும்…
மௌனமே மொழியாய்!!
மழலையெனவே முகம் மலர்ந்து…
தேவையாவும் சிணுங்கலால் உணர்த்தி…
எந்தை கையகத்துள்ளே உறக்கத்தில்…
புன்சிரிப்பு பூக்கும் வேளையிலே…
“ சாமி வந்து என் மகளை தாலாட்டும்” எண்றெண்ணிய தெய்வத்துடன் உறவாடிய பொழுதுகள் யாவும்…
மௌனமே மொழியாய்!!
பள்ளி செல்ல அடம் பிடித்து…
வீட்டுப்பாடம் முடிக்கப்பெறாமல்…
வகுப்பறையின் புறம் நிற்கையிலும்…
தேர்வறையில் அமர்ந்து கொண்டு…
தோழியிடம் விடை வினவி…
விடையும் பெறாமல் வினாவும் விளங்காமல்…
நட்புடன் உறவாடிய பொழுதுகள் யாவும்…
மௌனமே மொழியாய்!!
பூப்படைந்த பெண் பிள்ளை…
வாயாடல் கூடாது…
என பேசத்துடிக்கும் போது
அடக்கிவைக்கையிலும்…
கட்டிளங்காளைகள் காதல் மொழி பேசி…
சுற்றி சுற்றி வந்து கண்ணடித்த வேளையிலும்….
கற்ற நல்லொழுக்கத்துடன் உறவாடிய பொழுதுகள் யாவும்…
மௌனமே மொழியாய்!!
உற்றார் உறவினர் கூடி வாழ்த்த…
பெற்றவர் வந்து தாரை வார்க்க…
மங்கல வாத்தியங்கள் முழங்க…
மாங்கல்யம் கழுத்தில் சூடி…
கணவனின் கரம் பற்றி…
அக்கினியை வலம் வந்து…
மனையாளென உறவாடிய பொழுதுகள் யாவும்…
மௌனமே மொழியாய்!!
ஆசை கணவன் ஆறத்தழுவ…
நாணம் என்னும் ஆடை விலக்க…
இனிய இல்லறத்தில் கூடும் வேளையிலே…
புதிய உறவுகளுடன் புரியாதோர் உலகத்தில் அடியெடுத்து வைத்து குடும்ப பாரம் சுமக்கையிலே…
இல்லத்து அரசியென உறவாடிய பொழுதுகள் யாவும்…
மௌனமே மொழியாய்!!
தன் பெண்மை உணரும் தருணமாய்..
தன் கருவறையுள் தீப விளக்காய்…
தன் மகவை சுமக்கும் ஈரைந்து திங்களும்…
ஈன்ற சிசுவை கையிலேந்தி…
பெருமிதத்துடன் உயிர்பாலூட்டும் வேளையிலே…
உற்றவன் வந்து தலை வருடி…
உச்சி முகர… தாய்மையுடன் உறவாடிய பொழுதுகள் யாவும்…
மௌனமே மொழியாய்!!
இல்லறம் நல்லறமாய் போற்றி…
மக்கட்செல்வங்களை கரையேற்றி…
பேரக்குழந்தைகளுடன் காலம் கழித்து…
நரை கூடி நடை தள்ளாடும் நேரத்தில்
காத்திருந்த மௌனம் யாவும்
கண்ணீர் அருவியெனவே ஊற்றெடுக்க
கல்லறையில் அடங்கும் நாள் வரையில் தொடரும்…
மௌனமே மொழியாய்!!
மௌனம் என்னும் கூட்டிற்குள்…
மனதை மறைத்த மங்கையே…
போதும் நீ காத்த மௌனம்…
உடைத்தெறி இச்சங்கிலியை…
அநீதி ஒன்றைக் கண்டால்…
எழுச்சியுற்று தட்டிக் கேள்…
வெறும் காதல் பதுமை நீ அல்ல…
வீரமங்கை தான் என்று…
சாதித்து விட்டு திரும்பிப்பார்…
சாது மிறளும் நேரம் இது…
காடு தாங்குமா பார்த்து விடலாம்…
நீ சிறகை விரித்து பறக்கையிலே…
சிகரம் தொடும் வேளையிலே…
அதை காண்பவர் யாவரும்…
மௌனமே மொழியாய்!!
@sow karthi @Kamu pillai Sis
0 Comments